தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு


தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு
x

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று காலை புறப்பட இருந்த பால்கன்-9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2½ நிமிடங்களுக்கு முன் விண்வெளி பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிராகன் விண்கலத்தில் அமர்ந்தனர்

அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி மற்றும் சக வீரர்கள் 3 பேர் நேற்று நாசாவின் க்ரூ-6 விண்வெளி திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் நேற்று காலை விண்வெளி வீரர்கள் 4 பேரும் 39ஏ ஏவுதளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், ராக்கெட்டின் உச்சிக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து லிப்ட் மூலம் சென்றனர். அங்கு அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி, நாசாவின் விண்வெளி வீரரும், இந்த பயணத்தின் கமாண்டருமான ஸ்டீபன் போவன், பைலட் வாரன் ஹோப்ர்க் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெடியேவ் ஆகியோர் ஏரோ பிரிட்ஜ் எனப்படும் மூடப்பட்ட பால அமைப்பில் நடந்து சென்று ராக்கெட்டின் நுனி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிராகன் விண்கலத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

ராக்கெட் பயணம் ஒத்திவைப்பு

அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்தும் சரி பார்க்கப்பட்டது. உள்ளே விண்வெளி வீரர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகள் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப கருவிகள், சீட் பெல்ட்டை சரி பார்த்தனர். நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. சரியாக அமீரக நேரப்படி காலை 10.45 மணிக்கு ராக்கெட்டின் எரிபொருள் பற்ற வைக்கப்பட்டு விண்ணில் பாய வேண்டும். அப்போது சரியாக மணி 10.42 மணிக்கு நாசா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக அவசர தகவல் வெளியானது. பிறகு சரியாக என்ஜின் பற்றவைக்கப்படுவதற்கு 2½ நிமிடங்களுக்கு முன் அந்த ராக்கெட் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்றும் ஏவ சாத்தியமில்லை

நாசா விதிமுறைகளின்படி பயணம் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை தரையிறக்க முடியாது. எனவே ராக்கெட்டில் உள்ள எரிபொருள் வெளியேற்றப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின் விண்வெளி வீரர்கள் மீண்டும் தரையிறக்கப்பட்டனர். தற்போது புளோரிடா மாகாணத்தில் வானிலை சாதகமாக இல்லை. எனவே நாளையும் (அதாவது இன்று) விண்ணில் ஏவ சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாற்று தேதி அறிவிப்பு

பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 400 கி.மீ உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தை அடைய சரியான நேரம் மற்றும் பாதை ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். எனவே இதில் நாசா விஞ்ஞானிகள் மாற்று தேதியாக வருகிற மார்ச் 2-ந் தேதி அமீரக நேரப்படி காலை 9.34 மணிக்கு மீண்டும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று துபாய் பட்டத்து இளவரசர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் எங்கள் லட்சியங்கள் தொடர்ந்து உயர்வாகவே உள்ளது. அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி மற்றும் க்ரூ-6 குழுவினருக்கு பாதுகாப்பான வெற்றிகரமாக பயணமாக அடுத்து அமைய வேண்டும் என விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story