நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் நேபாள பிரதமர் சர்மா ஒலி


Nepal PM Sharma Oli
x

File image

நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரதமர் சர்மா ஒலி தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

காத்மாண்டு,

நேபாளத்தில் பிரசந்தா தலைமையிலான அரசுக்கு கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால் பிரசந்தா அரசு கடந்த 12-ம் தேதி கவிழ்ந்தது. சர்மா ஒலி ஆட்சி அமைக்க நேபாள காங்கிரஸ் கட்சி ஆதரவு தர முன்வந்தது. அதையடுத்து, கடந்த 14-ம் தேதி, சர்மா ஒலியை புதிய பிரதமராக ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் நியமித்தார். கடந்த 15-ம் தேதி, சர்மா ஒலி 4-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் 21 புதிய மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர்.

அரசியல் சாசனப்படி, 30 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்காக நேற்று நேபாள நாடாளுமன்றம் கூடியது. தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க சர்மா ஒலி நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன்மீது எம் பிக்கள் விவாதம் நடத்த சபாநாயகர் தேவ்ராஜ் கிமிரி 2 மணி நேரம் ஒதுக்கீடு செய்தார்.

விவாதத்துக்கு பதில் அளிக்க பிரதமர் சர்மா ஒலிக்கும் நேரம் ஒதுக்கீடு செய்தார். அதன்படி, சர்மா ஒலி விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, ''நான் ஊழலில் சிக்கியது இல்லை. இனிமேலும் சிக்க மாட்டேன். யாரும் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன். நிலையான அரசு அமைக்க 2 பெரிய கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ளன'' என்று அவர் கூறினார்.

பின்னர், நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 275 எம் பிக்களில், 263 பேர் மட்டும் சபைக்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் வாக்கெடுப்பை புறக்கணித்தார்.மீதி 262 பேரில், சர்மா ஒலிக்கு ஆதரவாக 188 எம் பிக்கள் ஓட்டு போட்டனர். எதிராக 74 பேர் வாக்களித்தனர். எனவே, நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் சர்மா ஒலி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தேவ்ராஜ் கிமிரி அறிவித்தார். இதன்மூலம், சர்மா ஒலி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார்.


Next Story