மாயமான நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் கொள்ளுபேத்தி...!!!


மாயமான நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் கொள்ளுபேத்தி...!!!
x
தினத்தந்தி 22 Jun 2023 6:00 PM IST (Updated: 23 Jun 2023 12:47 PM IST)
t-max-icont-min-icon

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காணச் சுற்றுலா சென்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. அதனை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்,

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் இதுதான். டைட்டானிக் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து தொடங்கியது. அமெரிக்கா நோக்கி சென்ற அதில் 2000 பயணிகள் பயணித்தனர். அனைவரும் பெரும் பணக்காரர்கள் என்று கூறப்படுகிறது.

மகிழ்ச்சியுடன் பயணித்த அவர்களுக்கு இதுதான் கடைசிப் பயணம் என தெரியாது. திடீரென்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறைமீது பயங்கரமாக மோதியது. இதனால் கப்பல் இரண்டாக முறிந்து கடலுக்கடியில் முழ்கியது. பயணம் செய்த 1500-க்கும் மேற்பட்டோர் ஜலசமாதி ஆகினர். இதனை மையமாக வைத்து 1997-ல் 'டைட்டானிக்' என்ற ஹாலிவுட் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் இன்றளவும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ளன. கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அவைகள் கிடக்கின்றன.

அமெரிக்காவின் 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம் இதனை வியாபாரமாக மாற்ற நினைத்தது. அது டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.

இதற்காக 'போலார் பிரின்ஸ்' என்ற கப்பலும், 'டைட்டன்' என்ற நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்படுகிறது. 'டைட்டன்' வெறும் 22 அடி நீளமே உள்ள சிறிய நீர்மூழ்கிக் கப்பல்தான். இது டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆனது. இதில் 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். டைட்டனில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியால் 96 மணி நேரம் சுவாசிக்கலாம்.

வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணிக்கு கடலுக்குள் 'டைட்டன்' இறக்கிவிடப்பட்டது. அதில் 5 கோடீஸ்வரர்கள் பயணித்தனர். அவர்களின் விவரம் வருமாறு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பால் ஹென்றி நர்கியோல் (77), ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் (61), பாகிஸ்தானின் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஷசாதா தாவூத் (48), அவருடைய மகன் சுலைமான் தாவூத் (19).

ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய ஒன்றே முக்கால் மணி நேரத்தில், 'போலார் பிரின்ஸ்' கப்பலுடன் டைட்டனின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. தற்போது நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி வெண்டி ரஷ் டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது. வெண்டி ரஷ், வணிக அதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஆகியோரின் கொள்ளுப் பேத்தி ஆவார். அவர்கள் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளாகப் பயணம் செய்துள்ளனர்.

வெண்டி ரஷ், ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷை 1986-ம் ஆண்டில் மணந்தார். இவர் ஓஷன்கேட் நிறுவனத்தில் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ளார். ஸ்டாக்டன் ரஷ் டைட்டானிக்கிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story