உலகம் முழுவதும் 550-க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்


உலகம் முழுவதும் 550-க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு -  உலக சுகாதார அமைப்பு தகவல்
x

குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

உலகம் முழுவதும் இதுவரை 30 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை மொத்தம் 550-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், திடீரென பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுவதை வைத்து பார்க்கும் போது, கடந்த சில காலமாக கண்டறியப்படாத வகையில் இந்த நோய் பல இடங்களில் பரவி இருக்கக் கூடும் என்றும் இது குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குரங்கு காய்ச்சல், கொரோனா பரவிய அதே பாணியில் பரவவில்லை என்றும் கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இருப்பினும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி மேற்கொண்டு பரவாத வகையில் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


Next Story