அமெரிக்காவில் ஜனநாயக கட்சி பெண் எம்.பி மீது சரமாரி தாக்குதல்
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி பெண் எம்.பி ஆங்கி கிரேக் மீது இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருபவர் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆங்கி கிரேக். 50 வயதான இவர் நாடாளுமன்ற சமத்துவ குழுவின் இணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆங்கி கிரேக் வாஷிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 'லிப்ட்'டில் ஏறினார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவரும் 'லிப்ட்'க்குள் நுழைந்தார். பின்னர் அந்த இளைஞர் திடீரென ஆங்கி கிரேக்கை சரமாரியாக தாக்க தொடங்கினார். ஆங்கி கிரேக்கின் முகத்தில் கையால் குத்திய அந்த இளைஞர் அவரது கழுத்தையும் நெரித்தார்.
இதனையடுத்து அவரிடம் தப்பிப்பதற்காக ஆங்கி கிரேக் தனது பையில் வைத்திருந்த சூடான காபியை இளைஞரின் முகத்தில் ஊற்றினார். இதில் சூடு தாங்க முடியாமல் அந்த இளைஞர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார். இந்த தாக்குதலில் ஆங்கி கிரேக்குக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்தார்.
இதனிடையே ஆங்கி கிரேக் அளித்த புகாரின் பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு எம்.பி.யை தாக்கிய கென்ட்ரிக் ஹாம்லின் என்கிற 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த பெண் எம்.பியும், முன்னாள் நாடாளுமன்ற சபாநயாகருமான நான்சி பெலோசியை கடத்தும் நோக்கில் அவரது வீட்டுக்குள் சுத்தியலுடன் புகுந்த மர்ம நபர் நான்சி பெலோசி இல்லாததால் அவரது கணவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.