தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்- பாகிஸ்தான் ராணுவம் தகவல்
விமானப் படை தளத்தில் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 விமானங்கள் சேதமடைந்ததாக ராணுவம் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மியான்வாலியில் அந்நாட்டின் விமான படையின் பயிற்சி தளம் ஒன்று உள்ளது. இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் திடீரென அந்த தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் உஷாரான ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் இந்த சண்டை நீடித்தது. இதில், 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 விமானங்கள் சேதமடைந்தன.
இந்த விமானப்படை தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம் என ராணுவம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இருக்கும் விமானப்படை விமானங்கள் எதுவும் சேதமடையவில்லை என்றும், பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 விமானங்கள் மட்டும் சேதமடைந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் இன்று அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களில் விமானப்படை தளத்தை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர்.
விமான படை தளம் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் (TJP) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. புதிதாக தோன்றிய இந்த அமைப்பானது, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் (TTP) துணை அமைப்பாகும்.