ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சுற்றுலாவுக்கு பெயா்பெற்ற தீவுநாடான மாலத்தீவின் அதிபராக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவர் அப்துல்லா யாமீன் (வயது 63). இவர் தன்னுடைய பதவி காலத்தில் அரசுக்கு சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு அளிக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முன்தினம் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றத்துக்கு 7 ஆண்டுகள், லஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 4 ஆண்டுகள் என அப்துல்லா யாமீனுக்கு மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஊழல் வழக்கில் அப்துல்லா யாமீனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறையல்ல. அதிபராக இருந்தபோது அரசு பணத்தை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அவருக்கு எதிரான ஆதாரங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தீா்ப்பை அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.