பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர் நியமனம்
பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை ராணுவம் அனுப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.
இதில், இரண்டு பேர் இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டுப் படைகளின் தலைவர் பதவி தான் உயர்ந்த பதவி. இருப்பினும் அனைத்து முடிவுகளையும் ராணுவத் தளபதியே எடுப்பார். அவருக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது. இந்தப் பதவிகளுக்கு உரியோரை, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுப்பார்.
இது தொடர்பாக, சமீபத்தில் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாக்., முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரையும், கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.