லண்டன்: துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இந்திய வம்சாவளி சிறுமி கவலைக்கிடம்
லண்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தின்போது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த 9 வயது சிறுமி உள்பட 4 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் பெயர் லிசெல் மரியா என்றும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜீஷ்-வினயா தம்பதியின் மகள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 26, 37 மற்றும் 42 வயதான 3 ஆண்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஜேம்ஸ் கான்வாய் கூறுகையில், "உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 9 வயது சிறுமி, துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக லண்டன் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.