கென்யா: வரி உயர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 200 பேர் கைது


கென்யா:  வரி உயர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 200 பேர் கைது
x

கென்யா நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

நைரோபி,

கென்யா நாட்டில் வரி உயர்த்துவதற்கான செயல் திட்டம் அடங்கிய நிதி மசோதாவானது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் கருப்பு வண்ண டி-சர்ட் அணிந்தபடியும், விசில் அடித்தபடியும் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். ஆன்லைனில் ஹேஷ்டேக்குகள் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு அவர்கள் ஆத்திரம் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதுபற்றி தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்களுக்கு தொலைபேசி வழியே அழைத்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர். சைரன் அடித்தபடியே சென்று அவர்களை ஓட செய்தனர். இதனால், தெருக்களில் இருந்த பல கடைகள் அடைக்கப்பட்டன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

இதுபோன்று பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசும் அறிவித்தது. அவற்றில் உணவு பொருட்களில் ஒன்றான பிரட்டுக்கான வரியும் அடங்கும்.

கென்யா நாட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டு பொருளாதாரம் சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளது. வேலை வாய்ப்பின்மை மற்றும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை ஆகியவற்றால் இளைஞர்கள் உள்பட நாட்டு மக்களுக்கு வாழ்வதே கடினம் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story