நிவாரணப் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
ஐ.நா. உணவு விநியோக மையம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசா சிட்டி:
காசா மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், கிட்டத்தட்ட பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. காசாவின் தெற்கு முனையில் உள்ள முக்கிய நகரான ரபாவை தவிர்த்து மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ரபா பாதுகாப்பான பகுதி என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
இந்த இலக்கை எட்டுவதற்காக கடைசி நகரான ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் முண்டியடித்து சென்றபோது நெரிசல் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் காசாவின் மற்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
ரபா நகரில் ஐ.நா. அமைப்பின் உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் படையினர் குண்டு வீசிய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உணவு விநியோக மையத்தில் குண்டு விழுந்து வெடித்ததில் ஐ.நா. அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. உணவு விநியோக மையம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.