போருக்காக 15 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீடித்து வரும் போர் 100 நாட்களைக் கடந்துள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி திடீர் தாக்குதலை நடத்தி சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் நுழைந்து முழு அளவிலான போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் காசாவில் இதுவரை சுமார் 24 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீடித்து வரும் போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், போருக்காக இஸ்ரேல் அரசின் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்டத்திருத்தம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து அமைச்சரவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.
இறுதியில் நடப்பாண்டில் போருக்கு மட்டும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்குவதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 24 ஆயிரத்து 228 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.