சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்.. ஒரு வாரமாக தேடும் போலீஸ்
இந்திய மாணவர் மாயமானது குறித்து சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது கவலையை தெரிவித்துள்ளது.
சிகாகோ:
அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படும் நிகழ்வு தொடர்கிறது. இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை. என் ஷெரிடன் சாலையின் 4300 பிளாக்கில் இருந்து அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஒரு வாரமாக தேடியும் அவரைப்பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கண்டுபிடித்தாலோ, அவரை பற்றிய துப்பு கிடைத்தாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு சிகாகோ காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய மாணவர் மாயமானது குறித்து சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது கவலையை தெரிவித்துள்ளது. மேலும், மாணவரை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், காவல்துறை மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி, தகவல்களை அறிந்து வருவதாகவும் தூதரகம் கூறியிருக்கிறது.