அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை... அச்சுறுத்தலாக இருந்ததால் தாக்கியதாக குற்றவாளி வாக்குமூலம்


அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை... அச்சுறுத்தலாக இருந்ததால் தாக்கியதாக குற்றவாளி வாக்குமூலம்
x

உடற்பயிற்சி கூடத்தில் போலீசார் விசாரித்தபோது, வருண் மிகவும் அமைதியான நபர் என்று கூறியுள்ளனர்.

வாஷிங்டன்,

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண், கடந்த 2022-ம் ஆண்டு முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தங்கியிருந்து தனது படிப்பை தொடர்ந்து வந்த வருண், அப்பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு வழக்கமாக சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற வருணை, அங்கு வந்த ஜார்டன் அண்டிராடே(24) என்ற நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

தலையில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய வருண், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே குற்றவாளி ஜார்டன் அண்டிராடேவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் ஜார்டன் அளித்த வாக்குமூலத்தில், இதற்கு முன்பு வருணை பார்த்ததில்லை எனவும், உடற்பயிற்சி கூடத்தில் வைத்து வருணை பார்த்தபோது அவர் வித்தியாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்காப்புக்காகவே தன்னிடம் இருந்த கத்தியை வைத்து வருணை குத்தியதாகவும் ஜார்டன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் போலீசார் விசாரித்தபோது, வருண் மிகவும் அமைதியான நபர் என்றும், அவர் வழக்கமாக அங்கு வந்து செல்வார் எனவும் கூறியுள்ளனர். உயிரிழந்த வருணின் குடும்பத்தினருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story