இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள எட்ஜ்வரி பகுதியில் வசித்து வருபவர் அனிதா முர்கே (வயது 66). இவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அனிதா கடந்த 9ம் தேதி நண்பகல் 12 மணியளவில் எட்ஜ்வரி நகரின் புர்க் பிராட்வே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் தான் வைத்திருந்த கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார். கழுத்து, மார்பு பகுதியில் கத்திக்குத்து காயமடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனிதாவின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அனிதாவை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குபின் அனிதாவை கொலை செய்த ஜலால் டிபெல்லா (வயது 22) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜலாலிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.