கனடாவில் 'மர்மமான முறையில்' தீ விபத்து: இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி


கனடாவில் மர்மமான முறையில் தீ விபத்து: இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி
x
தினத்தந்தி 16 March 2024 1:11 PM IST (Updated: 16 March 2024 1:33 PM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டாவா,

கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் தேதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இந்திய வம்சாவளி குடும்பம் பிராம்டன் பகுதியின் பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைவ் பகுதியில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ் ஒன்டோரியோ அரசாங்கத்தின் சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு நாங்கள் சென்றோம். அங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் 3 மனித உடல்கள் கண்டறியப்பட்டன.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் கண்டறியவில்லை, சந்தேகத்துக்குரிய விபத்து இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த காவல்துறை அறிக்கையில், "இந்த வழக்கை நாங்கள் எங்களின் கொலை விசாரணை அமைப்பு மூலம் விசாரித்து வருகிறோம். இந்த தீ விபத்து தற்செயலானது இல்லை என்று ஒண்டோரியோ தீயணைப்பு அதிகாரி கருதியது போல, நாங்களும் இந்த தீ விபத்து சந்தேகத்துக்குரியதாகவே கருதுகிறோம்" என்றார்.


Next Story