இலங்கை சென்ற இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இலங்கை சென்றுள்ளது.
கொழும்பு,
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. சமீப காலமாக இலங்கையில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் நிலையில், இந்திய நீர்மூழ்கி கப்பல் இலங்கை சென்றிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு சென்ற இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பப்படுகின்றன.
அந்த வகையில் ஐ.என்.எஸ். ஷல்கி நீர்மூழ்கி கப்பல் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளது. ஐ.என்.எஸ். ஷல்கி நீர்மூழ்கி கப்பல் கடந்த 1992-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.