"இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை


இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை
x

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக அறிவுறுத்தி உள்ளது.

கார்டோம்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு 2-வது முறையாக இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழலில் நிதானமாக செயல்பட வேண்டும் எனவும், வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் வீட்டின் பால்கனி மற்றும் மொட்டை மாடி போன்றவற்றில் நிற்பதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. எப்போது சாத்தியம் ஏற்படுகிறதோ அப்போது விரைவாக நகரும் வகையில் பாஸ்போர்ட் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும், அத்தியாவசிய மருந்துகள், உணவு, குடிநீர் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் வரை பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story