'மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியா' - அமெரிக்கா பாராட்டு


India Election undertaking America commends
x

Image Courtesy : ANI

தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய அரசுக்கும், வாக்காளர்களுக்கும் அமெரிக்க அரசு சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறப்போவதில்லை. கடந்த 6 வாரங்களாக வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக பணியில் மக்கள் பங்கேற்று வாக்கு செலுத்தியதை நாம் கண்டோம். இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுடன் அமெரிக்காவுக்கு நல்ல கூட்டுறவு இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் அது தொடரும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.


Next Story