மடகாஸ்கருக்கு 5 ஆயிரம் டன் அரிசியை நன்கொடையாக வழங்குகிறது இந்தியா
கடந்த வாரம் மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை நன்கொடையாக வழங்குவதாக இந்தியா அறிவித்து இருந்தது.
அந்தனானரிவோ,
மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸிற்கான இந்திய தூதர் அபய் குமார், மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சேயை நேற்று சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை செய்தனர். அப்போது மனிதாபிமான உதவியாக மடகாஸ்கருக்கு 5,000 டன் அரிசியை இந்தியா நன்கொடையாக வழங்குவதாக அபய் குமார் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து மடகாஸ்கருக்கு அனுப்பப்படும் அரிசி மலகாசி துறைமுகமான டோமசினாவை அடுத்த மாதம் சென்றடையவுள்ளது. முன்னதாக, இந்தியா மடகாஸ்கரின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கி இருந்தது.
சமீபத்தில், ஜூன் 3, அன்று உலக மிதிவண்டி தினத்தன்று மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை நன்கொடையாக வழங்குவதாக இந்தியாவும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.