பாகிஸ்தானில் என்ஜினீயரிங் படித்த, வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதம்
பாகிஸ்தானில் என்ஜினீயரிங் படித்து விட்டு 70 சதவீதம் பெண்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.
கராச்சி,
பாகிஸ்தான் நாட்டில் என்ஜினீயரிங் படிப்பை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பெண்களை பற்றி கேலப் பாகிஸ்தான் மற்றும் பிரைட் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், வேலையில் இருப்போர், வேலையில்லாதோர் மற்றும் தொழிலாளர் அமைப்பில் இல்லாதவர்கள் என 3 பிரிவுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2020-21-ம் ஆண்டுக்கான அந்த அறிக்கையில், என்ஜினீயரிங் (பொறியியல்) படிப்பை படித்துள்ள 28,920 பெண்களில் 20.9 சதவீதத்தினர் வேலை ஏதும் இல்லாமல் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இந்த என்ஜினீயரிங் படித்த பெண்களில் 50.9 சதவீதத்தினர் தொழிலில் இருந்து விலகி உள்ளனர் என்றும் 28 சதவீதத்தினரே வேலையில் தொடர்ந்து உள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
மொத்தம் உள்ள என்ஜினீயரிங் படித்த பெண்களில் 21.1 சதவீதத்தினர் கிராமப்புறங்களிலும், 78.9 சதவீதத்தினர் மெட்ரோ நகரங்களிலும் வசித்து வருகின்றனர்.
கிராமப்புற பகுதிகளில் உள்ள என்ஜினீயரிங் படித்த பெண்களில் 43.9 சதவீதத்தினர் வேலையில் உள்ளனர். 36.3 சதவீதத்தினர் வேலை எதுவும் இல்லாமல் உள்ளனர்.
கிராமப்புற பகுதிகளில் என்ஜினீயரிங் படித்த பெண்களில் 64 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். 28.4 சதவீத பெண்கள் திருமணம் ஆகாமல் தனித்து வசிக்கின்றனர்.
என்ஜினீயரிங் படித்த பெண்களில் 25 முதல் 34 வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் (50.9 சதவீதம்) உள்ளனர். இவர்களை தொடர்ந்து 35 முதல் 44 வயதுடையவர்கள் (21.7 சதவீதம்) உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.