பிரான்சில் ஒருபுறம் மக்கள் போராட்டம்; மறுபுறம் கச்சேரியில் நடனம் ஆடிய அதிபரால் பரபரப்பு


பிரான்சில் ஒருபுறம் மக்கள் போராட்டம்; மறுபுறம் கச்சேரியில் நடனம் ஆடிய அதிபரால் பரபரப்பு
x

பிரான்சில் சிறுவன் படுகொலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இசை கச்சேரியில் மனைவியுடன் அதிபர் நடனம் ஆடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நீல் (வயது 17) என்ற வட ஆப்பிரிக்க சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.

போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மனின் அவரது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டு உள்ளார்.

பாரீசில் வன்முறை பரவியதில், 40 கார்கள் தீக்கிரையாகி உள்ளன. 170 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அவரது மனைவி பிரிகிட் உடன் பாரீஸ் நகரில் அக்கார் அரீனா பகுதியில் நடந்த 75 வயதுடைய எல்டன் ஜான் என்ற இங்கிலாந்து பாடகரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் பாடலுக்கு ஏற்ப, நடனம் ஆடினார். ஒருபுறம் போலீசாருக்கு எதிராக பிரான்சில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், மறுபுறம் அதிபர் மேக்ரான் அவரது மனைவியுடன் இசை கச்சேரியில் கைத்தட்டி, நடனம் ஆடியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


Next Story