இந்தியாவின் 'ஜி-20' செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு - சர்வதேச நிதியம் அறிவிப்பு
இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது.
வாஷிங்டன்,
இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது.
ஜி-20 தலைமை
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20-யின் தலைமைத்துவத்தை தற்போது இந்தியா அலங்கரிக்கிறது. அதிகாரம் மிக்க இந்த அமைப்பு கடந்த 1-ந்தேதி முதல் இந்தியாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்புக்கான கருப்பொருளை இந்தியா வெளியிட்டு உள்ளது. அதன்படி, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை இந்தியா அறிவித்து இருக்கிறது.
ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றிருப்பதை உறுப்பு நாடுகள் வரவேற்று உள்ளன. அதைப்போல இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என உறுப்பு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அறிவித்து உள்ளன.
கூட்டு செயல்திட்டம்
அந்தவகையில் இந்தியாவின் ஜி-20 செயல் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. இந்த அமைப்பின் திட்டம் மற்றும் கொள்கை மறுஆய்வுத்துறை இயக்குனர் செய்லா பசர்பாசியோக்லு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மிகவும் வளமான எதிர்காலத்திற்காக அவர்கள் (இந்தியா) ஒரு கூட்டு செயல்திட்டத்தை உருவாக்குகிறார்கள். தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளில் உண்மையில் அவசர கவனம் தேவைப்படும் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்தியாவின் ஜி-20 செயல் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.
மாநாட்டு பிரகடனம்
'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை இந்தியா அறிவித்து உள்ளது. அதாவது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உள்ளூர் அளவில், கூட்டாட்சி மட்டத்தில், சர்வதேச அளவில் பணிபுரிய வேண்டியதன் அவசியத்தை இந்தியா முதன்மைப்படுத்துகிறது.
இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாட்டு பிரகடனத்தை உருவாக்கியத்தில் இந்தியா முக்கிய பங்காற்றியது. இது ஒரு பெரிய சாதனையாகும். இதில் மிகவும் வலுவான மொழி இருந்தது. பெரும்பாலான உறுப்பினர்கள் உக்ரைனில் போரைக் கண்டித்தனர்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு
ஜி-20 செயல் திட்டங்களைத் தொடர்வதுடன், உலகளாவிய சமூகத்திற்கு முக்கியமான முன்னுரிமைகளையும் இந்தியா அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. நல்ல நிர்வாகத்திற்கு இது மிகவும் முக்கியமானது. மேலும் சமத்துவமின்மை மற்றும் நியாயமான அல்லது வெளிப்படையான பொது வருவாய்கள் மற்றும் செலவுகள் பற்றிய கவலைகள் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது.
இந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவின் ஜி-20 தலைமை பதவியின் முக்கிய கருப்பொருளாக இருக்கும். இவ்வாறு செய்லா பசர்பாசியோக்லு கூறினார்.