இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்


இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
x

இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை இஸ்ரேலை தாக்கியது. இஸ்ரேல் வான்பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கியது. ஆனாலும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின. மேலும், ராக்கெட்டுகளும் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதனால், இஸ்ரேலின் மோடியின் ரெயில் நிலையத்தில் சிறுபாதிப்பு எற்பட்டது. மேலும், பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த ஏவுகணை தாக்குதலில் காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம் மீது கடந்த ஜூலை 20ம் தேதி இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story