செங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் - அமெரிக்கா தகவல்
பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாஷிங்டன்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்றைய தினம் செங்கடல் வழியாக சென்ற 'ஆண்ட்ரோமேடா ஸ்டார்' என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரேயா அறிவித்தார். இந்த தகவலை அமெரிக்க ராணுவம் இன்று உறுதி செய்துள்ளது.
இதன்படி பிரிட்டனுக்கு சொந்தமான 'ஆண்ட்ரோமேடா ஸ்டார்' கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் கப்பலுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.