பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக அமெரிக்க குழு இன்று இலங்கை வருகை
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வருகிறது.
அமெரிக்கா உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பல்லாயிரம் கோடி கடனுதவி, நிவாரண பொருட்கள் உதவி என பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.
இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு ஏற்கனவே பல்வேறு உதவிகளை அறிவித்து இருக்கிறது. அந்தவகையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்துக்கு 120 மில்லியன் டாலர், கால்நடை பண்ணைத்துறைக்கு 27 மில்லியன் டாலர் மற்றும் 5.75 மில்லியன் டாலர் நிவாரண பொருட்கள் என ஏராளமான உதவிகளை அறிவித்து உள்ளது.
இதைப்போல மிகவும் பின்தங்கிய மக்களின் பாதுகாப்புக்காக 6 மில்லியன் டாலர் மானியத்தையும் அறிவித்துள்ள அமெரிக்கா, வருகிற மாதங்களில் இலங்கைக்கு மேலும் உதவிகளை செய்வதாக அறிவித்து உள்ளது.
பொருளாதார நிபுணர்களுடன் சந்திப்பு
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க உயர்மட்டக்குழு ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வருகிறது.
ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவிச்செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவினர் இலங்கை வருகின்றனர்.
29-ந்தேதி வரை இலங்கையில் இருக்கும் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர்.
அத்துடன் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள், சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்த உள்ள இந்த குழுவினர், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டமிடல்களையும் மேற்கொள்கிறார்கள்.
ஐரோப்பிய கூட்டமைப்பும் உதவி
இதைப்போல ஐரோப்பிய கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது. இதை கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து தெரிவித்து உள்ளன.
அப்போது நாட்டுக்கு தேவையான பொருட்களை குறிப்பாக உரம் மற்றும் எரிபொருளின் தேவையை ராஜபக்சே அவர்களிடம் எடுத்துரைத்தார்.
பிரான்ஸ், இத்தாலி, நார்வே, ஆலந்து, ஜெர்மனி, ருமேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி நாடுகளின் தூதர்கள் ராஜபக்சேவை சந்தித்து இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றனர்.
வெளிநாட்டு பணம் உச்சவரம்பு
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததும் ஒரு காரணம் ஆகும். எனவே அன்னிய செலாவணியை ஈட்டுவதற்காக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.
அதன்படி நாட்டில் தனிநபர் வைத்திருக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் சேர்க்கும் வகையில், கையிருப்பு உச்சவரம்பை 15 ஆயிரம் டாலரில் இருந்து 10 ஆயிரம் டாலராக குறைத்திருக்கிறது.
அதாவது தனிநபர் ஒருவர் 10 ஆயிரம் டாலர் அளவிலான வெளிநாட்டு பணம் மட்டுமே அதிகபட்சமாக கையிருப்பு வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள வெளிநாட்டு பணத்தை உடனடியாக வங்கியில் சேர்க்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார்.
இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கியத்துறையாக சுற்றுலா விளங்கி வருகிறது. ஆனால் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த துறை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
ஆனால் இந்த சூழலிலும் நாட்டுக்கு வரும் குறைந்த சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியாக திரும்பி செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கு அரசும் உதவ வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை தலைவர் பிரியந்தா பெர்னாண்டோ கூறியுள்ளார்.