ஜெர்மனி: பஸ்சில் பயணிகளை கத்தியால் தாக்கிய பெண்; 5 பேர் காயம்


ஜெர்மனி:  பஸ்சில் பயணிகளை கத்தியால் தாக்கிய பெண்; 5 பேர் காயம்
x

ஜெர்மனியில் பஸ்சில் சக பயணிகளை கத்தியால் தாக்கிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியா என்ற நகரில் சீகன் என்ற இடத்தில் பஸ் ஒன்று 40 பயணிகளுடன் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது, பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து சக பயணிகளை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற பயணிகள் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. அவர் போதை பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட நபராக இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில், பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஜெர்மனியின் மேற்கே சொலிங்கன் பகுதியில் நேற்று நடந்த திருவிழா ஒன்றில் பலர் கலந்து கொண்டபோது, சிரியா நாட்டை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தியதில் 67 மற்றும் 56 வயதுடைய 2 ஆண்கள் மற்றும் 56 வயதுடைய ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். இது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் என வழக்கறிஞர்கள் கூறினர். எனினும், அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.


Next Story