காசா போர்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி


காசா போர்:  இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி
x

காசா போரின் ஒரு பகுதியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்பட 1,400 பேர் பலியாகி உள்ளனர்.

வாஷிங்டன்,

இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் திரளாக வந்திருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பு, ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது.

இதில், இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு, அவர்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மோதல் நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானும் சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதுபோன்று, பலமுனை தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு முதல் நடந்து வரும் காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ நிதியுதவியை வழங்கி வருகிறது. இந்த ஓராண்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 297 கோடி நிதியுதவியாக இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இதுதவிர, ஓராண்டாக அமெரிக்கா சார்பில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, ரூ.40 ஆயிரத்து 807 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதில், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக போரில் குதித்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகளுக்கான செலவுகளும் அடங்கும். ஏனெனில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்களை இலக்காக கொண்டு அவற்றை தாக்கினர். இதனை தடுக்க அமெரிக்கா முன்வந்தது.

இந்த அறிக்கையானது, காசாவுக்கு எதிரான இஸ்ரேல் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகையுடன் நிறைவடைகிறது. இஸ்ரேல், கடந்த செப்டம்பர் இறுதியில் 2-வது முறையாக, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தொடங்கிய போருக்கான செலவு, இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இஸ்ரேலுக்கு எதிராக ஓராண்டுக்கு முன் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி தாக்குதலில், காசாவில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து உள்ளனர்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்பட 1,400 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிதியுதவிக்கான கணக்கீடுகளை ஹார்வர்டு ஜான் எப். கென்னடி கல்வி நிலையத்தின் பேராசிரியை லிண்டா ஜே. பில்மிஸ் மற்றும் சக ஆய்வாளர்களான வில்லியம் டி. ஹார்டங் மற்றும் ஸ்டீபன் செம்லர் ஆகியோர் மேற்கொண்டனர்.


Next Story