காசா: முடிகளை வெட்டி கொண்ட சிறுமிகள்; இந்த காரணத்திற்காக...!!
காசாவில் ரபா எல்லையின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றியதும், சர்வதேச நாடுகளின் உதவிகள் குறைந்து போய், பாலஸ்தீனியர்களுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.
காசா,
காசா பகுதியில் இஸ்ரேல் ஏறக்குறைய 10 மாதங்களாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், பாலஸ்தீனிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நிவாரண பொருட்கள் கிடைப்பது சிக்கலாகி உள்ளது. இந்நிலையில், காசாவில் உள்ள சிறுமிகள் முடிகளை வெட்டி கொண்டுள்ளனர்.
பொதுவாக சிறுவர்கள் முடி வெட்டி கொள்வது வழக்கம். ஆனால், இந்த பகுதியிலுள்ள சிறுமிகளும் முடி வெட்டி கொள்கின்றனர். காசாவில் குழந்தைகளுக்கான நோய்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லோப்னா அல்-அஜைஜா என்பவரிடம் சிறுமிகள் பலரும், எங்களுக்கு தலைமுடியை ஒழுங்குப்படுத்த சீப்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதற்கு அவர், அப்படியென்றால் முடிகளை வெட்டி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இவர் மத்திய காசா முனையில் டெயிர் அல்-பலா பகுதியில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போரால், சீப்பு என்றில்லாமல் தலைக்கு தேய்க்கும் ஷாம்பு, சோப்பு, வீட்டை தூய்மைப்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவையும் கிடைப்பதில்லை.
குப்பை சேகரிப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தூய்மை பற்றாக்குறை ஏற்பட்டு தொற்று நோய்கள் அதிகரித்து உள்ளன. நிவாரண முகாம்களில் குளிப்பதற்கு போதிய தண்ணீர் இல்லை. இதனால், குழந்தைகள் அழுக்கடைந்து நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
ரபா எல்லையின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றியதும், சர்வதேச நாடுகளின் உதவிகள் குறைந்து போய் விட்டன. இதனால், பாலஸ்தீனியர்களுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.