எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!
உலகின் டாப்-10 உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
நியூயார்க்,
உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இப்போது உலகின் டாப்-10 உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக கவுதம் அதானி உள்ளார்.
போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் குறியீட்டின் படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்த நிலையை அடைந்துள்ளார். அதே நேரத்தில், ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, கவுதம் அதானி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த பெர்னார்ட் அர்னால்ட்டைப் பின்தள்ளினார்.எனினும், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சில சமயங்களில் அதானியும், சில சமயங்களில் பெர்னார்ட் அர்னால்ட்டும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றனர்.
60 வயதான கவுதம் அதானி, இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக ஆபரேட்டரான அதானி குழுமத்தின் நிறுவனர் ஆவார்.அதானியின் சொத்து மதிப்பு 5.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.
இப்போது அவர் 155.7 பில்லியன் டாலர்களுடன் உலகின் இரண்டாவது பில்லியனர் ஆனார். அவருக்கு மேலே, அதாவது முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், 273.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார்.அதானிக்கு அடுத்தபடியாக பெர்னார்ட் அர்னால்ட் 155.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 92.6 பில்லியன் டாலர்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.