ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை...துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்கள்
தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பென்சில்வேனியா,
அமெரிக்காவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. முந்தைய காலங்களிலும் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இலக்காகி உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-
ஆபிரகாம் லிங்கன்
1865-ல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெஸ் கார்பீல்ட்
ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறே மாதங்களில் ஜூலை 2, 1881-ல் வாஷிங்டனில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் சார்லஸ் கிட்டோ என்பவரால் அமெஸ் கார்பீல்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வில்லியம் மெக்கின்லே
1901-ம் ஆண்டில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கிளம்பியபோது ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே லியோன் சோல்கோஸ் என்ற 28 வயது இளைஞரால் சுட்டுக் கொல்லபட்டார்.
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
1993-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு பிறகு, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹாரி ட்ரூமன்
1950-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் வீட்டுக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
ஜான் கென்னடி
1963-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜெரால்டு போர்டு
1975-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜெரால்டு போர்டை சுட்டுக் கொலை செய்ய 3 வாரங்களில் 2 முறை சதி நடந்தது. எனினும் 2 முயற்சிகளிலும் அவர் உயிர் தப்பினார்.
ரொனால்டு ரீகன்
1981-ம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.
தியோடர் ரூஸ்வெல்ட்
1912-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் மீண்டும் வேட்பாளராக களமிறங்கிய நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயம் இன்றி உயிர் தப்பினார்.
ராபர்ட் கென்னடி
1968-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி, லாஸ் ஏஞ்சல்சில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்ஜ் வாலஸ்
1972-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார். இதனால் வாலஸ் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.