ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு


ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு
x

ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யில் 90 சதவீதத்தை நிறுத்த செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

பிரசல்ஸ்,

உக்ரைன் மீது ரஷியா 97-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிரான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரஷியாவின் நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் செயல்பட பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்து வருகிறது.

ஆனால், ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷியாவை சேர்ந்தே உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டிற்கு தேவையான 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருளை ரஷியாவிடமிருந்தே பெறுகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷியா மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

பெல்ஜியத்தில் இன்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.


Next Story