ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை - ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையில் தகவல்


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை - ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையில் தகவல்
x

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த ஆண்டு குளிர்காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசல்ஸ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடுமையான எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை மற்றும் பணவீக்கத்தால், கடுமையான பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைவு, சர்வதேச வர்த்தக சூழலில் பாதிப்பு ஆகியவை ஏற்படலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3.3 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசியில் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடையும் என்றும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலும் இதே நிலை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2023-ம் ஆண்டு பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story