ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டும் டிஸ்னி நிறுவனம் - ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்க வாய்ப்பு
இரண்டாவது கட்டமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்,
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னி, பொழுதுபோக்கு சேவை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் செலவுகளை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களின் வரிசையில் கடந்த மாதம் டிஸ்னி நிறுவனமும் இடம்பிடித்து இருந்தது. எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாத காரணத்தால், தங்கள் ஊழியர்களில் 7 ஆயிரம் பேரை கடந்த மாதம் அதிரடியாக பணியை விட்டு நீக்கியது டிஸ்னி நிறுவனம்.
இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த முறை டிஸ்னி நிறுவனத்தின் திரைப்பட நிறுவனம், தீம் பார்க்குகள், தொலைக்காட்சி மற்றும் பல்வேறு உயர்மட்ட பதவிகளை வகிக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வரும் 24-ந்தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.