லிபியா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!


லிபியா வெள்ள பாதிப்பு:  பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!
x
தினத்தந்தி 14 Sept 2023 8:40 PM IST (Updated: 15 Sept 2023 11:08 AM IST)
t-max-icont-min-icon

டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

திரிபோலி,

தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லிபியாவை டேனியல் புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது.

இதனால், கனமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

டேனியல் புயல் முதலில் கிரீஸ் நாட்டில் பெருவெள்ளம் ஏற்படுத்தி இருந்தது. இதன்பின்னர், லிபியா நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமை பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது.

லிபியாவில் உள்ள வாதி டெர்னா ஆறானது மலையில் இருந்து தொடங்கி, நகரம் முழுவதும் சென்று மத்திய தரைக்கடல் பகுதியில் கலக்கும். ஆண்டில் பல நாட்கள் வறண்டிருக்கும். ஆனால், கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனமழையில் மற்றும் நீர்தேங்கியதில், 2 அணைகள் திடீரென வெடித்தன. இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடலோர துறைமுக நகரமான டெர்னாவின் மேயர், 18,000 முதல் 20,000 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இன்னும், ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. டெர்னாவிற்கு வெளியே இடிந்து விழுந்த அணைகள் 1970 களில் கட்டப்பட்டவை என்றும், அவை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.


Next Story