நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் நிறுத்தம்!


நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் நிறுத்தம்!
x

சில தொழில்நுட்ப கோளாறுகள் 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

வாஷிங்டன்,

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.

இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஓரியன் விண்கலத்தை சுமந்து செல்கிறது. இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதிக்க உள்ளனர்.

ஆர்ட்டெமிஸ்-1 விண்ணில் பாய்வதை காண, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏமாற்றமளித்துள்ளது.

நேற்றிரவு, ராக்கெட்டில் மூன்று மில்லியன் லிட்டருக்கும் அதிகமான அதி-குளிர் திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பும் பணி, மோசமான வானிலையால் மின்னல் எற்பட்டதால் அதிக ஆபத்து காரணமாக சிறிது நேரம் தாமதமானது. பின்னர் ஹைட்ரஜன் நிரப்பும் பணி தொடர்ந்தது.

மேலும், அதிகாலை 03:00 மணியளவில், மற்றொரு சிக்கல் வெளிப்பட்டது. பிரதான கட்ட ஹைட்ரஜன் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டது, அதன்பின் அது சரிசெய்யப்பட்டது.

தாமதத்தால் இன்று ராக்கெட் புறப்பட முடியாவிட்டால், செப்டம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஒன்றில் ஆர்ட்டெமிஸ்-1 விண்ணில் பாய்வதை காணலாம்.


Next Story