2023-ல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை
எதிர்காலத்தில் நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என டெட்ரோஸ் அதனோம் கூறினார்.
ஜெனீவா,
சீனாவின் உகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், 2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.
கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.