இலங்கை துறைமுகத்தை இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை- ரணில் விக்கிரமசிங்கே


இலங்கை துறைமுகத்தை இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை- ரணில் விக்கிரமசிங்கே
x

Image Courtesy: AFP

இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

கொழும்பு,

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இன்று வந்தடைந்துள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ந் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும்.

222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.

சீனாவிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான். இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். இந்த உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அம்பன்தோட்டா துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பத்திரிகைக்கு அவர் இன்று வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "தற்போது வந்துள்ள கப்பல் ராணுவப் பிரிவின் கீழ் வரவில்லை. இது ஒரு ஆராய்ச்சிக் கப்பல் வகையின் கீழ் இங்கு வந்துள்ளது. அப்படித்தான் கப்பலை அம்பன்தோட்டா வர அனுமதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story