கம்போடியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலி - வெடிபொருட்களை தவறாக கையாண்டதாக தகவல்

Image Courtesy : AFP
கம்போடியா ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு வெடிபொருட்களை தவறாக கையாண்டதே காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பினோம் பென்,
கம்போடியாவின் கமோங் சிபியூ மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். ராணுவ தளத்தில் உள்ள 4 கட்டிடங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் உடல்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வெடிபொருட்களை தவறாக கையாண்டதால் வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மாவோ பல்லா கூறுகையில், "குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, ராணுவ வீரர்கள் லாரிகளில் இருந்து வெடிமருந்துகளை சேமிப்புக் கிடங்குக்கு மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம். இருப்பினும், இதில் தொடர்புடைய அனைவரும் உயிரிழந்துவிட்டதால், வெடி விபத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவது கடினம்" என்று தெரிவித்தார்.