சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல்


சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல்
x
தினத்தந்தி 3 May 2023 7:49 AM IST (Updated: 3 May 2023 8:08 AM IST)
t-max-icont-min-icon

சூடான் நாட்டில் நடந்து வரும் ராணுவ மோதலில், 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்து உள்ளது.



ஜூபா


சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்து உள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன.

சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் நேரிடையாக களத்தில் இறங்கி, தங்களது தூதர்கள் மற்றும் குடிமக்களை மீட்டன.

இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவுதி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றி உதவியுள்ளனர்.

சூடானில் 4 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை மீட்கும்படி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, உயர்மட்ட அளவிலான அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் விமானங்கள், கப்பல்களை அனுப்ப அரசு முடிவு செய்தது.

இதன்படி, ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன. இந்த மீட்பு பணியில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது.

சூடானில், கடந்த வாரம் வியாழனுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீட்பு பணிக்கு ஏதுவாக, சூடான் ராணுவம், போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்புக்கு அனுமதி அளித்து உள்ளது. சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க அரசுகளின் முயற்சியால் இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது என கூறப்பட்டது.

இந்த நிலையில், தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் ஜூபா நகரில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மோதலில் ஈடுபட்டு உள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

இதன்படி மே 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 7 நாட்கள் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதற்காக தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீர் மயார்தீத் உடன் இரு தரப்பினரும் தொலைபேசி வழியே ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இதனால், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளின் பெயர்களை குறிப்பிடும்படியும், குறிப்பிட்ட நாள் மற்றும் இடம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து அதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் அதிபர் சால்வா, இரு தரப்பினரையும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story