ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2024 புத்தாண்டு - சிட்னி நகரில் கோலாகல கொண்டாட்டம்
சிட்னி ஹார்பர் பாலத்தில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
சிட்னி,
உலக மக்கள் அனைவரும் 2024 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
அந்த வகையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. அங்குள்ள சிட்னி நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். இதைக் கண்டு ரசிப்பதற்காகவே உலகம் முழுவதும் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. அங்கு 2024-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண வாண வேடிக்கைகளுடன் இரவை பகலாக்கும் வகையில் வானத்தில் ஒளி வெள்ளம் பரவியது.
சிட்னி ஹார்பர் பாலத்தில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரமிப்பூட்டும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனைக் கண்டு ரசித்த மக்கள், தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு 2024-ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.
இந்த வரிசையில் இறுதியாக, அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வசிக்காத தீவுகளான, பேக்கர் தீவு மற்றும் ஹவுலேண்ட் ஆகிய தீவுகளில்தான், இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு 2024 புத்தாண்டு பிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.