ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு
பஹ்ரைனில் கடந்த ஆண்டு காணாமல் போன கைகனின் உடல், சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பஹ்ரைன்:
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம் (வயது 31). மாடல் அழகியான இவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் வந்து ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்த அவர், பஹ்ரைனில் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை நிறுத்தினார். அதன்பின்னர் அவரை அவரது குடும்பத்தினரால் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மிகுந்த கவலை அடைந்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர்.
பஹ்ரைனில் உள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினரும் தூதரகத்தை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், காணாமல் போன கைகன் கென்னகம், ஓராண்டுக்கு பிறகு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 18-ம் தேதி தாய்லாந்து தூதரகத்தின் கவனத்திற்கு வந்தது. அவரது காலில் டாட்டூ குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து தூதரக அதிகாரிகள், கைகனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். அவர்கள் சொன்ன டாட்டூ அடையாளத்தை வைத்து, இறந்திருப்பது தங்கள் மகள்தான் என்பதை பெற்றோர் உறுதி செய்ததாக சீனா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக அளவில் மது அருந்தி அதனால் ஏற்பட்ட விஷம் காரணமாக இதயம் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகனின் குடும்பத்தினர் அவரது உடலை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தூதரகத்தின் உதவியை நாடி உள்ளனர்.