ரோஹிங்கியா அகதிகள் 69 பேர் அந்தமானில் தஞ்சம்
ரோஹிங்கியா அகதிகள் 69 பேர் அந்தமானில் தஞ்சம் அடைந்தனர்.
போர்ட் பிளேயர்,
வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோாஹிங்கியா அகதிகள் 69 பேர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் இருந்து இந்தோனேசியா நோக்கி படகில் புறப்பட்டனர்.
இந்த நிலையில் ரோாஹிங்கியா அகதிகளின் படகு நேற்று காலை இந்தியாவின் அந்தமான் தீவுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும் படகில் எரிபொருள் தீர்ந்தது.
இதை தொடர்ந்து அந்த படகு அந்தமானின் நிகோபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் படகில் இருந்த 19 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 28 சிறுவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை வழங்கினர்.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் அந்தமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.