ஹார்வர்டு பல்கலை. வாரிய பதவியில் இருந்து திடீரென விலகிய இஸ்ரேல் கோடீஸ்வரர்
ஹார்வர்டு கென்னடி பள்ளியின் வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் கோடீஸ்வரர் இடான் ஆஃபர் மற்றும் அவரது மனைவி பாட்டியா ஆகியோர் விலகினர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இசைக்கச்சேரியில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலே போருக்கு காரணமாக அமைந்தது. ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. போரை ஆரம்பித்த ஹமாஸ் இயக்கம் இப்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலியர்களைக் கொன்று போரை தூண்டிய ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசுதான் முழுமையான பொறுப்பு என்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டன. ஹார்வர்டு இளங்கலை பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் 33 ஹார்வர்டு மாணவர் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளி சிறையில் வாழ நிர்ப்பந்தித்துள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அறிக்கை வைரலாக பரவிய நிலையில், மாணவர் அமைப்புகளுக்கு பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் எதிர்ப்பு வலுத்தது. ஹமாசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஹார்வர்டு கென்னடி பள்ளியின் வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் கோடீஸ்வரர் இடான் ஆஃபர் மற்றும் அவரது மனைவி பாட்டியா ஆகியோர் விலகி உள்ளனர். இஸ்ரேலை குற்றம்சாட்டி மாணவர் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அந்த அறிக்கைக்கு பல்கலைக்கழக தலைவர் கிளாடின் கே கண்டனம் தெரிவிக்காததாலும் பதவி விலகியதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மாணவர் அமைப்புகளின் அறிக்கை தொடர்பாக தாமதமாக பதிலளித்த பல்கலைக்கழக தலைவர் கிளாடின் கேவுக்கு ஹார்வர்டு முன்னாள் மாணவர்கள் கண்டனம் தெரிவித்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.