வங்காளதேசம்; போராட்டத்தால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறப்பு
வங்காளதேசத்தில் ஒரு மாதத்துக்குப்பிறகு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
டாக்கா
வங்காளதேசத்தில் 30 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஜூன் மாதம் வெடித்த இந்த போராட்டத்தி வன்முறை ஏற்பட்டது. நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்ததால் கடந்த மாதம் 17 ஆம் தேதி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர் போராட்டக்காரர்கள்.
மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த 5-ந்தேதி ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாட்டில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியது. எனவே பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க இடைக்கால அரசு முடிவு செய்தது. அதன்படி 18-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை திறக்குமாறு கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி ஒரு மாதத்துக்குப்பிறகு நாடு முழுவதும் நேற்று பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.