வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்


வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
x

Image Courtesy : AFP

மதியம் 3 மணி நிலவரப்படி 27.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாக வங்காளதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டாக்கா,

அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று 5-வது முறை பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது.

இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி கலீதா, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத்தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் தற்போது வாக்கு எண்ணிக்கையை தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 27.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story