ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்: பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலி
ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலியாகினர்.
மாஸ்கோ,
ரஷியாவின் காகசஸ் மாகாணம் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனால் ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் அந்த தேவாலயம் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். மேலும் சிலர் அங்கிருந்த ஒரு அறைக்குள் ஓடிச்சென்று பூட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பாதிரியாரை கழுத்தை அறுத்துக்கொன்றனர். அவரை தடுக்க முயன்றபோது தேவாலய பாதுகாவலர்களையும் அவர்கள் சுட்டுக்கொன்றனர்.
அதேபோல் அங்குள்ள வேறு சில தேவாலயங்கள் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதில் தேவாலயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 20 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளை நோக்கி ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து முக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தாக்குதல் சம்பவத்துக்கு அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.