அமெரிக்கா: காதல் மனைவி முன் இந்தியர் சுட்டு கொலை
அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர், திருமணம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் கவின் தசார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர். மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்பவரை காதலித்து கடந்த மாதம் இறுதியில், அவருடன் திருமணம் நடந்தது. வருகிற 29-ந்தேதி மனைவியுடன் கவின் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன், மனைவி சிந்தியா மற்றும் தன்னுடைய சகோதரி தீப்ஷி ஆகியோருடன் வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்களை வாங்க சென்றார். இதன்பின் பைக்கில் புதுமண தம்பதி வீடு திரும்பியபோது, சரக்கு லாரி ஒன்று இவர்களை மோதுவது போல் சென்றுள்ளது. இதனால், பைக்கில் இருந்து அவர்கள் தவறி விழுந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த லாரியை கவின் பைக்கில் விரட்டி சென்றிருக்கிறார். அதன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில், லாரி ஓட்டுநர் சிரித்து கொண்டே சென்றிருக்கிறார். திடீரென துப்பாக்கியை எடுத்து வந்த அவர், கவினை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். இதில் கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
2016-ம் ஆண்டு முதல் கவின் அமெரிக்காவில் வசித்து வந்திருக்கிறார். 2018-ல் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் டிப்ளமோ முடித்து விட்டு அமெரிக்காவிலேயே சொந்த தொழில் செய்து வந்திருக்கிறார். திருமணம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் மற்றும் வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. இனவெறி சார்ந்த தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. இதில், நடப்பு ஆண்டில் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அதற்கு அவர்கள் பலியான சம்பவங்களும் நடந்து வருகின்றன.