போரில் 32,950 ரஷிய வீரர்கள் பலி - உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 32,950 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் பாதுக்காப்புத் துறை தெரிவித்துள்ளது.
கீவ்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்தப் போர் தொடர்ந்து 4 மாதங்களாக நீடிக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பிலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வரமறுப்பதாக ரஷியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், உக்ரைனில் ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு ரஷியா தன்னுடைய படையைத் திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று உக்ரைன் கூறுகிறது. இதனால் பேச்சுவார்த்தையும் இழுபறி நிலையிலே இருக்கிறது.
இந்தநிலையில் படிப்படியாக உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியப்படை கைப்பற்றி வருகிறது.
இதனிடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மேலும் 1,449 ஆயுதப் போர் டாங்கிகள், 3,545 போர் கவச வாகனங்கள், 729 பீரங்கி அமைப்புகள், 97 வான் பாதுகாப்பு அமைப்புகள், 213 போர் விமானங்கள், 179 ஹெலிகாப்டர்கள், 129 கப்பல் ஏவுகணைகள், 13 போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ரஷிய தரப்பு இழப்புகளின் பட்டியலையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.