பயிற்சியை முடித்து சீனா அந்த பக்கம் போனதும் தைவான் கடல்பரப்பில் நுழைந்த அமெரிக்க போர் கப்பல்
சீனா ராணுவ பயிற்சியை முடித்து சென்றதும் தைவான் கடல்பரப்பிற்குள் அமெரிக்காவின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் போர் கப்பல் நுழைந்து பயணித்து சென்றது.
வாஷிங்டன்,
தைவானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு ஆட்சி செய்து வருகிறது. சிறிய நாடான தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து கொள்ள சீனா தொடர்ந்து முயன்று வருகிறது.
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அமெரிக்கா பெரும் தடையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது சீனாவுக்கு கடுமையான ஆத்திரம் ஏற்படுத்தியது. தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியை தொடங்கியது.
தொடர்ந்து, தைவானை மிரட்டும் விதமாக சீனா தனது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை தைவான் எல்லைக்குள் அனுப்பியது. அதன்படி சீனா ஒரே நாளில் ஜே-10, ஜே-11 மற்றும் ஜே-16 ரக போர் விமானங்கள் மற்றும் எச்-6 குண்டு வீச்சு விமானங்கள் உள்பட 71 சீன போர் விமானங்களையும், 9 போர்க்கப்பல்களையும் தைவானை நோக்கி அனுப்பியது என்று தைவான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலைமையை கண்காணிக்க தைவான் ராணுவம் வான் மற்றும் கடல் ரோந்துகளை வலுப்படுத்தியது. 3 நாள் போர் பயிற்சிகளை முடித்து கொண்டு சீனா நாடு திரும்பிய நிலையில், தைவான் ஜலசந்தி வழியே அமெரிக்க போர் கப்பல் பயணம் செய்தது.
இதுபற்றி அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தி ஆர்லே பர்கே வகையை சேர்ந்த யூ.எஸ்.எஸ். மிலியஸ் (டி.டி.ஜி. 69) என்ற போர் கப்பல் ஒன்று தைவான் ஜலசந்தி பகுதியில் வழக்கம்போல் போக்குவரத்து மேற்கொண்டது.
சர்வதேச சட்டத்தின்படி அந்த கடல் பகுதியில் ஒரு உயரிய சுதந்திர இயக்கம் இருக்க வேண்டும் மற்றும் விமானங்கள் கடல் பரப்பின் மேல் பறந்து செல்ல வேண்டும் என்பதற்கான பயணம் அது என தெரிவித்து உள்ளது.
இந்த பயணம் ஆனது, இந்தோ-பசிபிக் பகுதியில் மேற்கொண்ட ஒரு சுதந்திர மற்றும் வெளிப்படை தன்மை கொண்டது. சர்வதேச சட்டங்கள் அனுமதிக்கிற எந்த பகுதியிலும் அமெரிக்க ராணுவம் வான்வளியே பறந்தும் மற்றும் கடல்வழியே பயணித்தும் இயங்கும் என அறிக்கை தெரிவிக்கின்றது.